கொல்கத்தா ஜூனியர் மருத்துவர்களுக்கு மிரட்டல்.? 51 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆர்.ஜி கர் நிர்வாகம்.!
ஜூனியர் மருத்துவர்களை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரின் பெயரில் 51 மருத்துவர்களுக்கு கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொல்கத்தா : கடந்த மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்ற சம்பவத்தை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கிறார்.
பயிற்சி மருத்துவர்கள் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் உறுதி செய்யப்படாத காரணத்தால் தற்போது வரையில் கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடத்தும் ஜூனியர் மருத்துவர்களை பணிக்கு திரும்புவதற்கு மாநில அரசு முதல் உச்சநீதிமன்றம் வரையில் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படியான சூழலில், ஆர்.ஜி கர் மருத்துவமனையில் பணியாற்றும் 51 மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், கல்லூரி வளாகத்தில் நுழைய தற்காலிக தடையும் விதித்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், அந்த 51 மருத்துவர்களும் போராட்டம் நடத்தும் ஜூனியர் மருத்துவர்களை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கும் சந்தீப் கோஷ் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள 51 மருத்துவர்களும் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரி விசாரணை குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த 51 மருத்துவர்களையும் வளாகத்திற்கு வர தடை விதித்தும் மருத்துவ குழுவினர் உத்தரவிடபட்டுள்ளது.
மேற்கண்ட ஒழுங்கு நடவடிக்கையானது நேற்று (செப்டம்பர் 9) நடைபெற்ற சிறப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களின் இரண்டு மூத்த மருத்துவர்கள், ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர், 20 மருத்துவ ஊழியர்கள், 11 பயிற்சி மருத்வவர்கள் மற்றும் பிற மருத்துவ (MBBS) மாணவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.