மணிப்பூர் செல்லவில்லை.. அமெரிக்கா செல்கிறார் – பிரதமர் பயணம் குறித்து உத்தவ் தாக்கரே காட்டம்!
5 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை அமெரிக்கா செல்வது குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து.
பிரதமர் மோடி வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 21ம் தேதி தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றடையும் பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கிறார். அடுத்த நாளான ஜூன் 22ல், அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இதுபோன்று, அடுத்தடுத்த நாள் பல நிகழ்வுகளில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. இந்த நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மோசமான கலவரம் அரங்கேறி வருகிறது. அங்கு பிரதமர் மோடி செல்லவில்லை, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதையெல்லாம் விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு செல்கிறார் என விமர்சித்துள்ளார்.