கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் ஒருவர் கூட பலியாகவில்லை -ராஜஸ்தான் முதல்வர்..!
கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் நாட்டிலேயே குறைந்த எண்ணிக்கையில் உள்ளது ராஜஸ்தான் மாநிலம். தற்போது இங்கு 81 பேர் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இந்த கொரோனா தொற்று மீண்டும் ஏற்படலாம். அதனால் அனைவரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி 4.55 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 1.10 கோடிக்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.