ஜனவரி 26-ல் டிராக்டர் பேரணி இல்லை – விவசாயிகள் அறிவிப்பு.!
ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா நடக்கும் டெல்லியில் டிராக்டர் பேரணி நடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கப்படாவிட்டால், வரும் ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், இன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? என்றும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தினால் நாங்கள் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. விவசாய சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடிவு எடுக்காவிடில், நீதிமன்றம் நிறுத்தி வைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, குடியரசு தின விழாவை சீர்குலைக்க 2 ஆயிரம் டிராக்டர்களில் ராஜ்பாத் சாலைக்கு விவசாயிகள் வர உள்ளனர் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லிக்கு விவசாயிகளை நுழையவிடுவது பற்றி நீதிமன்றம் முடிவெடுக்காது, அது போலீசின் முடிவு என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் ட்ராக்டர் பேரணி நடத்தப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.