பட்ஜெட் தாக்கலில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் பதிலடி
நிர்மலா சீதாராமன் : பட்ஜெட் தாக்கல் செய்த போது மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நேற்று செய்த 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் குறிப்பாக, ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.40,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கினார்கள், மேலும், இந்த பட்ஜெட் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்ற அவையில் பட்ஜெட் தாக்கல் குறித்து விளக்கமளிக்க நிர்மலா சீதாராமன் வருகை தந்தார். இந்த கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, ‘இது ஒரு பாரபட்சமான பட்ஜெட்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார். மேலும் ‘இது நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட்’ என்றும் கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதனை தொடர்ந்து அவர்களுக்கு விளக்கமளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது, “பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை. எந்த பாரபட்சமும் காட்டவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டு தான் இருக்கிறது. எனது பதில் உரையை கேட்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். முந்தைய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிடப்பட்டதா? பட்ஜெட் உரையில் எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட வாய்ப்பு கிடைப்பதில்லை.
மாநிலங்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றால், அது புறக்கணிப்பு கிடையாது. இடைக்கால பட்ஜெட், பொது பட்ஜெட்டில் மராட்டியம் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் அங்கு ரூ.7,000 கோடி மதிப்பில் பாரிய துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களுக்கு பெயரை குறிப்பிடாமல் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடையும்”, என நிர்மலா சீதாராமன் பதிலளித்து கூறி இருந்தார்.