இந்தியாவில் மத ரீதியான பாகுபாடு காட்டப்படவில்லை : ராஜ்நாத் சிங்
நாட்டில் யாரிடமும் மத ரீதியான பாகுபாடு காட்டப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஜனநாயகத்திற்கும், மத சார்பின்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும என டெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனைத்து தேவாலயங்களுக்கும் கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த திங்கட்கிழமை புதுடெல்லி பேராயர் தேவாலயங்கள் மற்றும் நகரம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில் நாட்டின் நலனுக்காக கிறிஸ்துவ சமுதாயம் வெளிக்கிழமை பிரார்த்தனை நடத்த கோரி இருந்தார்.
அந்த கடிதத்தில் பேராயர் அனில் கவுடோ கூறி இருந்ததாவது:-
நமது அரசியலமைப்பிலும், நமது நாட்டின் மதச்சார்பற்ற நிலையிலும் உள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்கும் ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையை நாங்கள் பார்க்கிறோம்.நாம் 2019 ஆம் ஆண்டை நோக்கி முன்னேறும்போது, புதிய அரசாங்கம் வேண்டும். மே 13, 2018 ல் இருந்து நம் நாட்டிற்காக ஒரு பிரார்த்தனை பிரச்சாரத்தை ஆரம்பிப்போம். நம்மையும் நம் நாட்டையும் புனிதமாக்க வேண்டும்.என கூறப்பட்டு இருந்தது.
இந்த சுற்றறிக்கைக்கு இந்திய மதசார்பின்மை மற்றும் ஜனநாயகம் மீதான நேரடித் தாக்குதலாக ஆர்.எஸ்.எஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது
இது மோடி அரசாங்கத்தின் மீதான நேரடி தாக்குதல் என கூறப்படுகிறது. இந்த கடிதத்திற்கு மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
மதம் மற்றும் சாதிகளின் வேறுபாடுகளை உடைத்து பாகுபடு இல்லாத உள்ளடக்கிய வளர்ச்சி நோக்கி பிரதமர் மோடி பாடு பட்டு வருகிறார். முற்போக்கான மனநிலையுடன் சிந்திக்க மட்டுமே நாம் அவர்களை கேட்க முடியும் என கூறி உள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றார். மதம், சாதி அடிப்படையில் யாரிடமும் பாகுபாடு காட்டப்படவில்லை என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், பாகுபாடு காட்டுவதற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என்றும் உறுதியளித்தார்.