பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டம் இல்லை – பெட்ரோலியத் துறை அமைச்சர்!
2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதை ஒட்டி அதற்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.6 முதல் ரூ.10 வரை குறைக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேட்டியளித்துள்ளார்.
கடந்த வார தொடக்கத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் லிட்டருக்கு ரூ.8 குறைப்பது குறித்து நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக விவாதம் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கச்சா எண்ணெய் சந்தைகளில் நிலவும் அதிக ஏற்ற இறக்கம் காரணமாக எரிபொருள் விலை குறைப்பு ஏற்படாது என்று சுட்டி காட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 40 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் இங்கு முன்பை விட விலை குறைவு. 2021 நவம்பர் மாதம் மற்றும் 2022 மே மாதத்தில் பெட்ரோல், டீசல் சில்லறை விலைகளில் குறைக்கப்பட்ட உலகின் ஒரே நாடு இந்தியா.
இந்தியாவில் 602 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு.!
தற்போது உலக அளவில் எரிசக்தி, எண்ணெய் மற்றும் எல்பிஜி நுகர்வோர்களில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதாவது இந்தியாவில் எரிசக்தி தேவை மிக அதிகமாக உள்ளது. ஆனால் உலகளவில் எண்ணெய் விலையில் ஏற்படும் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் காரணமாக, பெட்ரோல், டீசல் குறைப்பது அரசாங்கத்திற்கு கடினமாக உள்ளது. எனவே தற்போது விலை குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை இல்லை என்று தெரிவித்துக்கொண்டார்.