‘இடம் இல்லை’ – 11 நாட்கள் மரத்தில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞன்….!
தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மரத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு மே 4-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர் தனது குடும்பத்திற்கு கொரோனா பரவுவதை தடுப்பதற்காக 11 நாட்கள் மரத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளைகளில், மூங்கில் குச்சிகளை கொண்டு ஒரு படுக்கையை கட்டி எழுப்பினார். அதில், அவர் 11 நாட்கள் அந்த மரத்தில் செலவிட்டுள்ளார்.
சிவா குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர். தனக்கு பாதித்த கொரோனா , தனது குடும்பத்தில் யாரையும் பாதித்து விடக்கூடாது என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கு தனிமைப்படுத்தும் மையமில்ல. 2 நாட்களுக்கு முன்புதான் எஸ்.டி ஹாஸ்டலை ஒரு தனிமைப்படுத்தும் மையமாக மாற்றியுள்ளனர். அதுவரை எங்களிடம் எந்த தனிமைப்படுத்தும் மையமும் இல்லை. மற்ற கிராமங்களில் இதுபோன்ற மையங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. அதனால் தான் நான் என்னை இப்படி தனிமைப் படுத்திக் கொண்டேன். எனக்கு உதவ என் கிராமத்தில் யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனைவரும் வைரஸைப் பற்றி பயப்படுகிறார்கள். யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறியுள்ளார்.
சிவா பெரும்பகுதியான நேரத்தில் போனை பயன்படுத்துகிறார். மேலும், அவரது குடும்பத்தினர், சிவாவிற்கு, கயிறு மற்றும் ஒரு வாளியை பயன்படுத்தி அவரது உணவுகளை கொடுக்கின்றனர். மேலும் பலர் அந்த கிராமத்தில் தனிமைப்படுத்தி உள்ள நிலையில் சிலர் குளியலறையிலும், சிலர் வயல்களிலும், மற்றவர்கள் சாக்குகளை கொண்டு தற்காலிக குடிசைகள் அமைத்து தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.