தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது -மத்தியபிரதேசத்தில் அதிரடி உத்தரவு!
ஜூன் மாதத்திற்கான சம்பளம் பெறும் பொழுது கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ் இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான மிகப்பெரும் பேராயுதம் தடுப்பூசி தான் என மக்கள் நம்பி வரும் நிலையில், பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சிலர் தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்பி தடுப்பூசி போடுவதற்கு அஞ்சுகின்றனர். இருப்பினும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் விரைவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் அவர்கள், மக்களை தடுப்பூசி போடுவதற்கு அறிவுறுத்தும் வகையில் தற்போது அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் மாத சம்பளம் கிடையாது என கூறியுள்ளார். இதன்படி ஜூன் 31-ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அதற்கான சான்றிதழை காண்பித்தால் தான் அடுத்த மாதத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமல்லாமல் அரசு வேலை பார்க்கக் கூடிய தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கூட தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்ற தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏன் இவ்வளவு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார் என்றால் அந்த மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் குறித்து ஆராய்ச்சி செய்தபோது அவர்கள் யாருமே தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தான் மாவட்ட நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.