கடந்த ஒரு வாரமாக 146 மாவட்டங்களில் புதிதாக கொரோன பாதிப்பு ஏற்படவில்லை – மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்!
கடந்த ஒரு வாரத்தில் 146 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் மந்திரிகளின் உயர்மட்டக்குழு கூட்டம் காணொளி மூலமாக நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அவர்கள் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனாவின் வளர்ச்சியை இந்தியா முடக்கி விட்டதாகவும் கடந்த 7 நாட்களில் புதிதாக 146 மாவட்டங்களில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை எனவும், 18 மாவட்டங்களில் 14 நாட்களாகவே புதிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், 6 மாவட்டங்களில் 21 நாட்களாகவும், 21 மாவட்டங்களில் 28 நாட்களாகவும் புதிதாக தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இது அனைத்தும் 19 கோடியே 50 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்ததால் ஏற்பட்ட முன்னேற்றம் எனவும், ஒருநாள் பரிசோதனை திறன் 12 லட்சமாக நாட்டில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்திற்கும் குறைவாகவே ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி மேற்கொண்ட அணுகுமுறையால் கொரோனாவை வெற்றிகரமாக ஒடுக்கிஉள்ள தாகவும் தெரிவித்துள்ள அவர், இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவால் இதுவரை 125 பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், பல்வேறு நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பு ஊசிகளை விநியோகித்து உலக நம்பிக்கையை பெற்றுள்ளது எனவும் பேசியுள்ளார்.