தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிட தேவையில்லை – மத்திய அரசு!
தடுப்பூசி கொள்கை குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்தக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
உலக முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே தினமும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டு வருகின்ற நிலையில், ஒரே நேரத்தில் தடுப்பூசி போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசி திட்டம், தடுப்பூசியின் விலை ஆகியவை குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இது தொடர்பாக மத்திய அரசு தற்போது பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் சர்வதேச அளவிலான கொரோனாவை கட்டுப்படுத்தக் கூடிய முக்கியமான திட்டங்கள் முற்றிலும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அறிவியல் பூர்வமான கருத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் செயல்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா மிக அதிகமாக பரவி வரும் நிலையில் நீதிமன்றத்தின் குறுக்கீடு இதில் தேவை இல்லை எனவும் அந்த கொள்கையை குறித்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.