தனி நபராக வாகனம் ஓட்டினால் முக கவசம் தேவையில்லை – பெங்களூர் மாநகராட்சி!
பெங்களூரில் தனி நபராக வாகனம் ஓட்டுபவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்களும் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது.
அதே சமயம் முக கவசம் அணியாவிட்டால் அபராதமும் வசூலிக்க பட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிவதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என, மாநகராட்சி சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஒருவர் மட்டும் சென்றால் இனிமேல் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும், முக கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் செல்லலாம் எனவும், அதே சமயம் இரு சக்கர வாகனத்தில் பின்னால் யாரேனும் அமர்ந்திருந்து இருவராக பயணித்தால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அது போல கார் டிரைவருடன் வேறு பயணிகள் இருந்தால் அவர்களும் நிச்சயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்படும் என்று பெங்களூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.