நீட் தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை – தேசிய தேர்வு முகமை.!
டெல்லி : நீட் தேர்வில் 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் அது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதாவது, ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து பல முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், “நீட் தேர்வில் 720க்கு 718 மற்றும் 719 மதிப்பெண்களை மாணவர்களை பெற்றதில் எந்த முறைகேடும் இல்லை, 6 மையங்களில் கேள்வித்தாள் தவறாக வழங்கப்பட்டதால் 30 நிமிடங்கள் தாமதமாக தேர்வு தொடங்கியதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
குறைந்த நேரம் மட்டுமே வழங்கப்பட்டதாக மாணவர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில், நீதிமன்றத்தின் ஆலோசனைப் படி நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரைப்படி கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது. மாணவர்களின் புகார்களை விசாரிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஒன்றிய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, நீட் தேர்வு முறைகேடு தகவலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.