இந்தியாவில் லாம்டா கொரோனா இல்லை..!-உத்திரபிரதேசத்தில் உறுதியானது கப்பா தொற்று..!
இந்தியாவில் லாம்டா வகை கொரோனா தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை. உத்திரபிரதேசத்தில் கப்பா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்ததை அடுத்து, நாட்டில் கடைபிடிக்கப்பட்ட கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது.
அதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் கட்டுப்பாடுகளை மக்கள் சரிவர கடைபிடிக்காத காரணத்தால் அங்கு மீண்டும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதே போன்று இந்தியாவில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணத்தால் பொது இடங்களில் மக்கள் செல்கிற பொழுது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் இருப்பது மீண்டும் நாட்டில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கும்.
அதனால் நாட்டில் உள்ள அனைவரும் கொரோனா விதிமுறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும் என்றும், இதுவரை நாட்டில் யாருக்கும் லாம்டா வகை வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, நாட்டில் தற்போது டெல்டா, டெல்டா பிளஸ் ஆகிய கொரோனா வகைகள் பரவி வருகிறது. தற்போது உத்திரபிரதேசத்தில் புதிதாக 2 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் டெல்டா வகைகளை போன்று அதிக பாதிப்பு தரக்கூடிய வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.