கேரள முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – இன்று கூடுகிறது சட்டப்பேரவை.!
இன்று ஒரு நாள் மட்டும் கூடும் கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.
கேரளாவில் சமீபத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் தலைமையிலான அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தி வருகிறார்.
இது தவிர கொரோனா விவகாரத்தைக் கையாளும் விதம், ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளும் இடது ஜனநாயக முன்னணி மீது காங்கிரஸ் கட்சி வைத்துள்ளது. அதனால், இன்று சட்டப்பேரவையில் பெரும் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கலாம் எனத் தெரிகிறது. 140 உறுப்பினர்கள் கொண்ட பேரவையில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக அரசுக்கு 91 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 45 உறுப்பினர்கள் ஆதரவும் உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் சூழலில் கடும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கேரள சட்டப்பேரவை இன்று ஒரு நாள் மட்டும் கூடுகிறது. முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளா சட்டப்பேரவையில் நிதி மசோதா தாக்கல் செய்தபின், காங்கிரஸ் எம்எல்ஏ வி.டி.சதீஷன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவார் எனத் தெரிகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின் கேரள சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. 2005-ம் ஆண்டு உம்மன் சாண்டி அரசுக்கு எதிராக கொடியேறி பாலகிருஷ்ணன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.