No சான்றிதழ் … No சம்பளம் – பஞ்சாப் அரசு அதிரடி
தடுப்பூசி சான்றிதழ் விவரங்கள் வழங்கப்படாவிட்டால், பணியாளரின் சம்பளம் வழங்கப்படாது என்று பஞ்சாப் அரசு உத்தரவு.
அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, பஞ்சாப் அரசு ஊழியர்கள் தடுப்பூசி சான்றிதழை வழங்கவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது என அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒருவர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் அல்லது ஒரு டோஸ் மட்டுமே செலுத்தியிருந்தாலும், அவர்களுக்கு சம்பளம் வேண்டுமானால் பஞ்சாப் அரசாங்கத்தின் ஜாப் போர்டலில் தங்களது தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும். இருப்பினும், தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.
மிகவும் பரவக்கூடியது என்று அறியப்படும் ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று குறித்து பெரிய கவலைகள் இருக்கும் நேரத்தில், மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்துவதற்கு பஞ்சாபில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பஞ்சாப் அரசாங்கத்தின் iHRMS இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
iHRMS என்பது ஒருங்கிணைந்த மனித வள மேலாண்மை அமைப்பு என்பதாகும். இது மென்பொருள் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விழிப்புடன் இருக்கவும், கொரோனா குறித்த ஆய்வு, கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசியை அதிகரிக்கவும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.