நிஜாமுதீன் மாநாடு.! 46 வெளிநாட்டினர் மீது டெல்லி போலீசார் 12 குற்றப்பத்திரிகைகளை தாக்கல்
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பல நாடுகளை சார்ந்த வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். அப்போது, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா உறுதியானது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை 46 வெளிநாட்டினருக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை மற்றும் 11 துணை குற்றப்பத்திரிகைகளை நேற்று தாக்கல் செய்தது.
சாகெட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ஜூன் கடைசி வாரத்திலும் ஜூலை மாதத்திலும் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 915 வெளிநாட்டினருக்கு எதிராக மொத்தம் 47 குற்றப்பத்திரிகைகள் டெல்லி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
விசா விதிகளை மீறுதல், தொற்று நோய்கள் சட்டம் தொடர்பான அரசாங்க வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை மீறுதல், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் விதிகளை மீறுதல் மற்றும் தடை உத்தரவுகளை மீறியதாக கூறி 12 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவை ஜூன் 25, ஜூலை 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பரிசீலிக்கப்பட உள்ளன.