இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
அடுத்த 15 நாட்களுக்குள் செயற்கைகோள் வழியாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில் ஓட்டுநர்/வாகன உரிமையாளர் ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும் என்றும், அதன் பிறகு டோல்கேட் கடந்து செல்லும் போது Fastag பார் கோடு மூலம் ஸ்கேன் செய்து சுங்கக்கட்டணம் வங்கி கணக்கு வாயிலாக நேரடியாக வசூல் செய்யப்பட்டுவிடும்.
இந்த முறையின் மூலம் வசூல் செய்யப்படுவதால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் அதிகமான சில சமயம் வாகனங்கள் நீண்ட தூரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுவிடும். இதனை தடுக்கும் பொருட்டு சாட்டிலைட் (செயற்கைகோள்) வழியாக சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என முன்னர் செய்தி வழியாக கூறப்பட்டது.
நேற்று அதனை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று (ஏப்ரல் 15) ஒரு நிகழ்வில் பேசிய நிதின் கட்கரி, செயற்கைகோள் வழியாக சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படும் முறை அடுத்த 15 நாட்களுக்குள் (ஏப்ரல் இறுதிக்குள்) அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.
வாகனங்கள் எங்கு செல்வது என்பதை கண்காணிக்க GNSS (Global Navigation Satellite System) பொருத்தப்படும் என்றும், அதன் வாயிலாக சாட்டிலைட் மூலம் வாகனங்கள் எங்கிருந்து எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை கணக்கிட்டு நேரடியாக சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும், இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்கும் சூழல் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முறை மூலம் வசூல் செய்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் தினமும் இரு திசையிலும் 20 கி.மீ வரை கட்டணமில்லா பயணம் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டம் அமல்படுத்தப்படும் போது தான் இதன் முழு விவரம் விரைவில் வெளியாகும்.