நிதி அயோக்கில் மம்தா.! இந்தியா கூட்டணியில் இருந்து ஒரே தலைவர்.! காரணம் என்ன.?
டெல்லி : மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
இது தவிர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சிகள் ஆளும் முதல்வர் கலந்துகொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு கலந்து கொள்ளும் ஒரே முதல்வர் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி மட்டுமே.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ஹிமாச்சல பிரதேசத்தின் சுக்விந்தர் சிங் சுக்கு, கர்நாடகாவின் சித்தராமையா, தெலுங்கானாவின் ரேவந்த் ரெட்டி. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பேனர்ஜி பங்கேற்பது குறித்து அவர் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கத்திற்கு பாஜக அரசு அரசியல் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதாக முன்னர் தெரிவித்துள்ளார்.
மேலும், ” மத்திய பட்ஜெட் என்பது கூட்டணிகளுக்கு ஆதரவான தன்மையை தான் காட்டுகிறது. அது ஒரு பக்கச்சார்பான அரசியலாக்கம். மத்திய பட்ஜெட் மற்ற மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு (கூட்டணி கட்சிகளுக்கு) சில சிறப்பு சலுகைகளை வழங்கலாம். ஆனால், அதற்காக எதிர்க்கட்சி மாநிலங்களை முழுமையாக ஒதுக்க முடியாது என்றும் நிதி ஆயோக் பற்றி மம்தா பானர்ஜி கூறினார்.
இப்படியான சூழலில் தற்போது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் மையக் கருப்பொருள் “விக்சித் பாரத்@2047,” என்பதாகும். 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்த ஆலோசனையில் நிதி ஆயோக் கவனம் செலுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.