‘அந்த பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் இல்லை? ‘ ! பட்ஜெட் விவகாரத்தில் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் ..!
டெல்லி : கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 23-ம் தேதி நடந்த கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் மத்திய படஜெட் தாக்கல் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்த பேசி இருந்தார். அதனை தொடர்ந்த இன்று நடைபெற்ற கூட்டத் தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு பதிலளித்து பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “கடந்த 2013-2014ல் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான பட்ஜெட் ரூ.21,934 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 2024-2025 ஆண்டில் ரூ.1.23 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் ஐந்து மடங்கு உயர்வு உள்ளது. பிரதமர் கிசான் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.3.2 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.
நான் 2004-2005, 2005-2006, 2006-2007, 2007-2008 மற்றும் பலவற்றிலிருந்து பட்ஜெட் உரைகளை எடுத்து வருகிறேன். கடந்த 2004-2005 ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பட்ஜெட்டின் போது 17 மாநிலங்களின் பெயர்கள் இல்லை. இதனை அப்போது ஆட்சியில் இருந்தவர்களை நான் கேட்க விரும்புகிறேன்.
அந்த 17 மாநிலங்களுக்கும் பணம் செல்லவில்லையா? அவர்கள் அதை நிறுத்தி விட்டார்களா? அவர்கள் அதை நிறுத்தி இருந்தால் அவர்கள் கேள்விகளை எழுப்புவதற்கு எல்லா உரிமைகளும் உள்ளன. மேலும், இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பட்ஜெட்டில் ரூ.17,000 கோடி ரூபாய் கணிசமான நிதியுதவியை வழங்கியுள்ளோம்.
இதில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் செலவுக்காக மட்டும் ரூ.12,000 கோடியும் அடங்கும். ஜம்மு மற்றும் காஷ்மீர் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு பணத்தை செலவழிக்க அதிக நெகிழ்வுத்தன்மையை பெறுவதற்காக நாங்கள் எங்கள் தோள்களில் சுமக்க விரும்பும் சுமை இது தான்” என்று நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.