மக்களவையில் சிரித்த நிதியமைச்சர்.! பதில் கொடுத்த ராகுல் காந்தி.!
டெல்லி : நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்தார். அதன் பிறகான கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மத்திய பட்ஜெட் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது, கல்விக்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு சிறப்பு அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும் விமர்சித்தார்.
அடுத்து இடஒதுக்கீடு பற்றி பேசிய ராகுல் காந்தி, மத்திய பட்ஜெட் தயாரிப்பில் கூட ஓபிசி, சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் யாரும் இடம்பெற்றவில்லை என்றும், பட்ஜெட்டுக்கு முந்தைய நிகழ்வான அல்வா கிண்டும் இடங்களில் கூட ஒரு சில நபர்களை தவிர ஓபிசியினர் இடம்பெறவில்லை. சிறுபான்மையினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என புகைப்படம் காட்டி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிரித்து இருப்பார். அதனை தொடர்ந்து முகத்தை மூடி கொண்டும் இருப்பார். இதனை கண்ட ராகுல் காந்தி, நான் சிரிப்பதற்காக இதனை கூறவில்லை. இந்த இடஒதுக்கீடு விவகாரம் 90 சதவீத இந்திய மக்களுக்கான பிரச்சனை. உங்கள் பட்ஜெட் 3 சதவீத இந்தியர்களுக்கானது. 73 சதவீத இந்தியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து உங்கள் அல்வா போல எதுவும் கிடைக்கவில்லை என கடுமையாக விமர்சனம் செய்தார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.