மக்களவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

nirmala sitharaman

Nirmala Sitharaman: தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகள் உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட  பணிகளை தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளனர். இதில், குறிப்பாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக பல்வேறு கட்டங்களாக வெளியிட்டது.

அதில், தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பூபேந்திர யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா, எல்.முருகன், சிந்தியா ஆகியோர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்திருந்தது. ஆனால், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை.

மக்களவைத் தேர்தலில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக நிர்மலா சீதாராமனிடம் அவ்வப்போது கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என்று விளக்கமளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒரு ஆங்கில செய்தி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மக்களவை தேர்தல் ஏன் போட்டியிடவில்லை? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது, இந்த தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என கேட்டார்கள். அதுவும், பாஜக தலைமை எனக்கு வரும் தேர்தலில் தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. எங்கு போட்டியிடலாம் அல்லது போட்டியிடலாமா வேண்டாமா என்பது தொடர்பாக பல நாட்கள் நான் யோசித்தேன். பின்னர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு செலவு செய்ய என்னிடம் பணம் இல்லாததால் நான் போட்டியிடவில்லை என்று பாஜக தலைமையிடம் தெரிவித்துவிட்டேன்.

இதை கட்சியும் ஏற்றுக்கொண்டது என்றார். நாட்டின் நிதியமைச்சரிடமே தேர்தலில் போட்டியிட பணம் இல்லையா? என்று அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்டதற்கு, இந்தியாவின் ஒட்டுமொத்த பணமும் எனக்கு சொந்தமானது அல்ல என்றும் எனது சம்பளம், எனது சேமிப்பு ஆகியவை மட்டுமே எனக்கு சொந்தமானது, அது இந்தியாவிற்கான நிதி அல்ல என பதிலளித்தார். மேலும், மக்களவை தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்வேன் எனவும் குறிப்பிட்டார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்