பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக, காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பேசிய கட்சித் தலைவர் ராகுல்காந்தி, குருஷேத்திரப் போரில் கவுரவர்களைப் போல அதிகாரத்திற்காக பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் போராடுவதாகவும், காங்கிரசோ பாண்டவர்களைப் போல உண்மைக்காக போராடுவதாகவும் கூறினார். கொலை வழக்கில் சிக்கியவரை பாஜக தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார்.
ராகுலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி, தன்னை பாண்டவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதா என்று வினவியுள்ளார். இந்து மதம் மற்றும் நம்பிக்கைகளை போலியாக பேசி காங்கிரஸ் கட்சி ஏமாற்றப் பார்ப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் இருக்கும் ராகுல்காந்தி, நீதிமன்றத்தால் நிரபராதி என கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அமித்ஷாவை விமர்சிப்பதா என்றும் நிர்மலா சீத்தாராமன் சாடினார்.