Nipah Virus: செப் 16-க்குப் பின் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.! கேரள சுகாதாரத் துறை அமைச்சர்!
கடந்த சில நாட்களாக கேரளாவில் மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிபா வைரஸால் கோழிக்கோட்டில் 2 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு அறிகுறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. நிபா வைரஸ் பரவலை அடுத்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது.
கேரளாவில் இதுவரை ஆறு பேருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இதனால் கோழிக்கூடு மாவட்டத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பூங்கா, கடற்கரை போன்றுவற்றையும் அரசு மூடியுள்ளது. பொது நிகழ்ச்சிகளுக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செப்டம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு கேரள மாநிலத்தில் புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவித்த அவர், “வைரஸ் தாக்குதலின் இரண்டாவது அலை இல்லை என்பதை உறுதிப்படுத்த, மரபணு வரிசைமுறை முடிவுகள் நாளை கிடைக்கும்.”
“இதற்கிடையில், மத்திய குழுக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களையும் ஆய்வு செய்து வருகின்றன. மாநிலத்தில் கடைசியாக செப்டம்பர் 15-ம் தேதி நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. செப்டம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை”
“பாலூட்டிகளில் வைரஸ் இருப்பதைக் கண்டறிய 36 வவ்வால்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்ஐவி) அனுப்பப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார். இதற்கிடையில், கேரளாவில் நிஃபா வைரஸால் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாடு – கேரளா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.