கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி..!
கேரளாவில் மீண்டும் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் இன்று காலை 5 மணியளவில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளான். நான்கு நாட்களுக்கு முன்பு இந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தான். சனிக்கிழமை இவனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும், இவனது மாதிரிகள் புனே தேசிய கிருமியியல் மையத்திற்கு நேற்று முன் தினம் அனுப்பப்பட்டது.
இதில் இவனுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த வைரஸ் தொற்றை கண்காணிக்கும்படி பல்வேறு தடுப்பு குழுக்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவனுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சிறுவனுடன் தொடர்பில் இருந்த மருத்துவ பணியாளர்கள் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ‘கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியாளர் மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர் ஆகிய இருவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.’
மேலும், புனேவின் தேசிய கிருமியியல் மையத்திலிருந்து வரக்கூடிய மருத்துவக்குழு, கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க பரிசோதனை மையம் தொடங்க இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 12 வயது சிறுவன் இறப்பதற்கு முன்பு 3 மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.