மணிப்பூர் வன்முறை: பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம் குறித்த புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு..!
மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கை குறித்த புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மே 3 அன்று மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) நடத்திய பேரணிக்குப் பிறகு, குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன.
மேலும், வன்முறையின் போது 71 பேர் உயிரிழந்ததோடு, 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன்பின், மாநிலம் முழுவதும் பல நாட்களாக வன்முறை தொடர்ந்து வருவதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு துணை ராணுவப் படைகளை அனுப்பியது.
இதனையடுத்து, மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. மெய்டேய் மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையேயான வன்முறையின் போது மணிப்பூரில் ஏற்பட்ட உயிர்கள் மற்றும் சொத்துக்கள் இழப்பு குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், அங்கு இயல்புநிலையை மீட்டெடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியது.
இதன்பின், மத்திய அரசும், மாநில அரசும் உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்து மாநிலத்தில் நிலைமை சீரடைந்துள்ளதாக தெரிவித்தது. அந்த நிலை அறிக்கையில், மொத்தம் 318 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன, அங்கு 47,914 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 626 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, மெய்டேய் மற்றும் குக்கி சமூகத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்த தலைமைச் செயலாளரும் அவரது பாதுகாப்பு ஆலோசகரும் மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று உத்தரவிட்டது.
மேலும், மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகள் குறித்த புதிய நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டது. முன்னதாக, மைத்தேயி சமூகத்தை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.