ராஜஸ்தானில் டிசம்பர் முழுவதும் 13 மாவட்டங்களுக்கு இரவு ஊரடங்கு!
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ராஜஸ்தானில் டிசம்பர் முழுவதும் 13 மாவட்டங்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது வரையிலும் அமலில் உள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அவ்வப்போது சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு அங்குள்ள அரசாங்கம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானின் 13 மாவட்ட தலைமையகங்கள் ஆன கோட்டா, ஜெய்ப்பூர் ஜோத்பூர், பிகானேர், உதய்பூர், ஆழ்வார், பில்வாரா, நாகூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது டிசம்பர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இடங்களில் அனைத்து சந்தைகள் மற்றும் பணியிடங்கள் இரவு 7 மணிக்குள் மூடப்படும் எனவும் எனவே ஊழியர்கள் 8 மணிக்குள் வீடு திரும்பி விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. லாரிகள் மற்றும் பிற பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.