“மீண்டும் இரவு நேர ஊரடங்கு” – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
டெல்டாவைவிட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக் கூடியது என மத்திய அரசு தகவல்.
இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா தொற்று பரவல் 10% மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
டெல்டாவைவிட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதி இருப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 4 நாட்களில் ஒமிக்ரான் பரவல் இரட்டிப்பாகியுள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார். இதனிடையே, இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வரை 200ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.