பெங்களூர் கலவரம்.. 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் என்ஐஏ விசாரணை..!
கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்டசீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் பேஸ் புக்கில் சிறுபான்மையினர் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டார்.
இதனால், டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி ஆகிய இடங்களில் ஏற்பட்ட கலவரத்தால் அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு, காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. அப்போது ,போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் 400-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, 850 பக்க குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்கிடையில், இந்த கலவரத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.
இதனால், இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிவாஜி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் ஹர்ஷத், சாம்ராஜ் பேட்டை காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது கான் ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராக நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, ரிஸ்வான் ஹர்ஷத், ஜமீர் அகமது கான் ஆகிய இருவரும் நேற்று காலை என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகினர்.