நியூஸ்க்ளிக் நிறுவனருக்கு 10 நாள் நீதிமன்ற காவல் ..!
டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி வழங்கியது.
நியூஸ் கிளிக் மற்றும் அதன் பத்திரிகையாளர்களுடன் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பல பத்திரிகையாளர்களை டெல்லியில் போலீசார் விசாரித்தனர். பின்னர் டெல்லியில் உள்ள ‘நியூஸ்க்ளிக்’ அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்தனர்.
46 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் இருவருரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை ஏழு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ‘நியூஸ்க்ளிக்’ நிறுவனர் நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரின் 7 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் போலீஸ் காவலில் இருந்த இருவரையும் டெல்லி போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இருவரும் மதியம் 2:50 மணியளவில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவரையும் 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அரசுத் தரப்பு கோரிக்கை வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி வழங்கியது. ‘நியூஸ்க்ளிக்’ நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடவே பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.