புதிய வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலைச் சித்தரிக்கின்றன..! பிரதமர் மோடி
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி, இந்த ரயில்கள் உதய்பூர்-ஜெய்ப்பூர், திருநெல்வேலி-மதுரை-சென்னை, ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய வழித்தடங்கள் இடையே இயக்கப்படும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று தொடங்கப்படுவதால், இந்தியா முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் இணைப்பையும் கணிசமாக மேம்படுத்தும் என்றும் இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை சித்தரிக்கின்றன எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ள பல ரயில் நிலையங்கள் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘ஆசாதி கா அம்ரித் கால்’ உருவாக்கப்படும் அனைத்து நிலையங்களும் ‘அம்ரித் பாரத் நிலையங்கள்’ என்று அழைக்கப்படும்.” எனக் கூறினார்.
மேலும், “வேகம், உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அளவு 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது. இன்று ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநில மக்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வசதியைப் பெறுவார்கள்.”
“இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை சித்தரிக்கின்றன. 25 வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இப்போது மேலும் ஒன்பது ரயில்கள் சேர்க்கப்படும். வந்தே பாரத் ரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றில் ஏற்கனவே 1,11,00,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் கூறியது போல நாட்டில் இதுவரை 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களால் நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 34 ஆக உயரும். இந்த வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கத்தின் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.