சில நாடுகளில் புதிய வகை கொரோனா பரவுகிறது – மத்திய அரசு எச்சரிக்கை!
சில நாடுகளில் புதிய வகை கொரோனா பரவுகிறது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் ஆங்காங்கு கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில்பி.1.1.529 எனும் புதியவகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள இங்கிலாந்து சுகாதாரத்துறை, தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த புதிய உருமாற்றம் அடைந்த தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக குறைவான செயல் திறனைக் கொண்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
எனவே, ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரக்கூடிய விமானங்களுக்கும் இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே 99 நாடுகளில் இருந்து வரக்கூடிய வெளிநாட்டு பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில், இந்த புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகள், குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.