#Breaking:புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 5 நகராட்சிகள்,10 பஞ்சாயத்துகள் உட்பட 1,149 பதவிகளுக்கு அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக முன்னதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, குளறுபடிகள் காரணமாக தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தியதால்,உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதாக புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில்,புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,புதுச்சேரியில் நவம்பர் 2,7, 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக,முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.11 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி முடிவடைகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.15 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி முடிவடைகிறது.இறுதியாக மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.22 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடிவடைகிறது.
மேலும்,வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசமானது முதற்கட்ட தேர்தலுக்கு அக்.22 ஆம் தேதியும்,இரண்டாம் கட்ட தேர்தலுக்கு அக்.27 ஆம் தேதியும்,மூன்றாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 2 ஆம் தேதியும் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.