காஷ்மீரில் புதிய ஆட்சி., முதலமைச்சராக உமர் அப்துல்லா.! ‘370’ ரத்துக்கு பிறகான புதிய மாற்றங்கள்…,
ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் சட்டமன்றம் கூடுகிறது. அன்று தனது கட்சி பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சராகிறார் உமர் அப்துல்லா.
டெல்லி : அக்டோபர் 31, 2019இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய பாஜக அரசு. அதற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் சட்டசபையுள்ள தனி யூனியன் பிரதேசமாகவும் , லடாக் சட்டசபை அல்லாத தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது.
சுந்திரத்திற்கு பிறகு, மன்னர் ராஜா ஹரி சிங் விருப்பத்தின் பெயரில் ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் 2019இல் ரத்து செய்யபட்டன. அதற்கு பிறகு அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு (2014 தேர்தலுக்கு பின்) அண்மையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவடைந்து அக்டோபர் 8ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது.
தேர்தல் முடிவுகள் :
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு தனி மாநிலமாக ஜம்மு காஷ்மீர் உருவான பின்னர் அங்கு நடைபெற்று முடிந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாளை மறுநாள் (அக்டோபர் 16) ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கூடுகிறது. அன்று தனது கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார் உமர் அப்துல்லா. காஷ்மீரின் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளது. இதுபோக 4 சுயேட்சைகள், ஒரு ஆம் ஆத்மி உறுப்பினர் என தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியமைக்க மொத்தம் 55 உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.
முன்னதாக , தனது ஆதரவு பிரதிநிதிகளுடன் ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் உமர் அப்துல்லா. அதனை தொடர்ந்து 2019 முதல் ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி கைவிடப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்…
1957ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநில அங்கமாக இருந்தாலும், பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளை தவிர வேறு ஏதேனும் துறைகள் குறித்து சட்டத்தை ஜம்மு காஷ்மீரில் இயற்ற வேண்டும் என்றால் அதற்கு மாநில அரசின் ஒப்புதல் வேண்டும்.
சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மற்ற மாநிலங்களில் மாநில அரசை கலைப்பது போல ஜம்மு காஷ்மீர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் இந்திய குடியரசுத் தலைவருக்கே கிடையாது.
ஜம்மு காஷ்மீரில் நிலம் அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டும் என்றால் அதனை ஜம்மு காஷ்மீரில் உள்ளவர்கள் மட்டுமே வாங்க விற்க முடியும். மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் சொத்துக்களை வாங்க முடியாது. ஜம்மு காஷ்மீரில் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த முடியாது.
இவ்வாறு பல்வேறு தடைகள், ஜம்மு காஷ்மீரையும் , இந்திய அரசையும் பிரித்து வைத்திருந்தது என்றும், சட்டப்பிரிவு 370 என்பது ஜம்மு காஷ்மீர் மற்றும் மத்திய அரசுக்கு இடையே ஒரு எல்லைக்கோடு போல இருந்தது என்றும் பலரும் கூறி வந்தனர்.
தற்போதைய அதிகாரங்கள்…
சிறப்பு அந்தஸ்து அமலில் இருந்தபோது மாநில அரசின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். தற்போது அனைத்து மாநிலங்களையும் போல புதிய அரசாங்கத்தின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுவிட்டதால், உள்ளூர் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு மத்திய அரசுடன் இணைந்து புதிய அரசு தீர்வு காணமுடியும்.
ஜம்மு காஸ்மீர் மக்கள் பிரதிநிதிகள், மற்ற மாநிலங்களை போல மாநில நிர்வாகத்தின் மீதான முழு கட்டுப்பாட்டையும் பெறுகிறார்கள்.
இனி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை தனியாக ஜம்மு காஷ்மீரில் அனுமதி பெற வேண்டியதில்லை. மற்ற மாநிலங்களில் புதிய சட்டங்கள் அமல்படுத்துவது போல ஜம்மு காஷ்மீரில் புதிய சட்டங்கள் அமலுக்கு வருவதில் நிர்வாக ரீதியில் சிக்கல்கள் எழாது.
ஜம்மு காஷ்மீரில் நிறைவேற்றப்படும் சட்டதிட்டங்கள், தீர்மானங்கள் இனி மற்ற மாநிலங்களை போல மாநில ஆளுநரின் ஒப்புதல் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இனி ஜம்மு காஷ்மீரின் சட்ட ஒழுங்கு மற்றும் நில மேலாண்மை உள்ளிட்ட முக்கியமான துறைகளில் நிர்வாக ரீதியிலான கட்டுப்பாட்டை பயன்படுத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.