மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை : ஆக – 3ல் முதல்வருடன் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆக – 3ல் முதல்வருடன் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.
கொரோனா தொற்றுப் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும். 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும். பள்ளிக்கு வராமல் இருக்கும் 2 கோடி குழந்தைகள் 2020-ம் ஆண்டுக்குள் பள்ளியில் சேர்க்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது. மேலும், பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்.
மேலும், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்கல்வியையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்று பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆகஸ்ட் 3ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனையின் போது, இக்கல்விக் கொள்கையின் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.