#Breaking:சற்று நேரத்தில்…ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர் மோடி!
டெல்லி:குடியரசுத்தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை,பிரதமர் மோடி சற்று நேரத்தில் சந்திக்க உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக நேற்று பஞ்சாப் வந்த பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார்.
அப்போது,பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் நின்றது.இதைத்தொடந்து,பிரதமரின் வருகை,திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும்,முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும்,பாதுகாப்பு குறைபாடு குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கிடையில்,உடனடியாக பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பிச்சென்றார்.விமான நிலையம் சென்ற பிரதமர், நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன்.உங்கள் முதல்வருக்கு அதற்காக நான் நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள் என பதிண்டா விமான நிலையத்தில் இருந்த பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகினது.
இதனைத் தொடர்ந்து,பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைத்தது பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.இந்த உயர்மட்டக்குழு 3 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பஞ்சாப்பில் நேற்று பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக பிரதமரிடம்,குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தொலைபேசியில் உரையாடினார்.இதனைத் தொடர்ந்து,பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்தார்.
இந்நிலையில்,டெல்லியில்,குடியரசுத்தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை,பிரதமர் மோடி இன்று இன்னும் சற்று நேரத்தில் நேரில் சந்திக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடைபெற்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து குடியரசுத்தலைவரிடம் பிரதமர் விளக்கம் அளிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
President Ramnath Kovind expressed concern on the security breach in PM’s Punjab visit. PM to meet the President shortly: Govt Sources pic.twitter.com/5DpkQm0PQs
— ANI (@ANI) January 6, 2022