முகேஷ் அம்பானிக்கு புதிய கொலை மிரட்டல்…ரூ.20 கோடி இல்லை ரூ.200 கோடி..!
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் புதிய மின்னஞ்சல் அனுப்பிய ரூ.20 கோடி வேண்டாம் ரூ.200 கோடி வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இன்று மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்தது. அதில், முகேஷ் அம்பானி மின்னஞ்சல் மூலம் ரூ.20 கோடி கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் வந்தது. இந்த மின்னஞ்சலைப் பார்த்த பிறகு, முகேஷ் அம்பானியின் பாதுகாப்புப் பொறுப்பாளர் மும்பையின் காம்தேவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகார் அடிப்படையில், காவல்துறை அடையாளம் தெரியாத நபர் மீது ஐபிசியின் 387 மற்றும் 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறது.
அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய மின்னஞ்சலில், “எங்களுக்கு ரூ.20 கோடி தராவிட்டால், உன்னை கொன்று விடுவோம். இந்தியாவிலேயே சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், முந்தைய மின்னஞ்சலுக்கு பதில் இல்லாததால் அந்த அடையாளம் தெரியாத நபர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். அதில் ‘எங்கள் மின்னஞ்சலுக்கு சரியாக பதிலளிக்கவில்லை. அதனால் எங்களுக்கு ரூ.20 கோடியில் வேண்டாம் ரூ.200 கோடி வேண்டும் இல்லையெனில் உன்னை கொலை செய்து விடுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு, ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் மருத்துவமனைக்கு அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன. ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு போன் செய்து அம்பானி, அவரது மனைவி நிதா மற்றும் மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோரை கொன்று விடுவதாகவும், மேலும் மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்கு வெடிகுண்டு வைப்பதாகவும் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார்.
அந்த மிரட்டலை தொடர்ந்து பீகாரில் உள்ள தர்பங்காவை சேர்ந்த ராகேஷ் குமார் மிஸ்ரா (30) என்பவரை மும்பை போலீசார் கைது செய்தனர். அதற்கு முன், ஆகஸ்ட் 15, 2022 அன்று ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கும் இதேபோன்ற மிரட்டல் அழைப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.