பாஜகவுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன்; ராகுல் காந்தி பேச்சு.!
நான் மக்களின் பிரதிநிதி ஒரு போதும் பாஜகவுக்கு பயப்பட மாட்டேன் என வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு பயணம்
எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ராகுல் வயநாடு பயணம் செய்தார். கேரளாவின் வயநாடு பொதுக்கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட ராகுல் காந்தி உரியற்றினார்.
ராகுல் காந்தி உரை
நான் வயநாட்டை சேர்ந்தவன் இல்லை என்றாலும் மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக கருதுகிறார்கள். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் மக்கள் பிரச்னைகளுக்காக தான் குரல் கொடுக்க வேண்டும். விளைவுகளைப் பற்றி பொருட்படுத்த கூடாது.
தடுக்க முடியாது
எனது எம்.பி பதவியை பறிக்கலாம், எனது வீட்டை எடுத்துக்கொள்ளலாம், என்னை சிறையில் கூட தள்ளலாம், ஆனால் வயநாடு மக்களின் பிரதிநிதியாக நான் தொடருவதை பாஜகவினரால் தடுத்து நிறுத்த முடியாது.
பாஜகவுக்கு பயப்பட மாட்டேன்
என் வீட்டிற்கு காவலர்களை அனுப்பினால் நான் அஞ்சுவேன் என அவர்கள் நினைத்தார்கள். எனக்கு கவலை இல்லை, அந்த வீட்டில் குடியிருப்பதை நானும் விரும்பவில்லை, பாஜகவுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன். எனக்கு எதிராக எது நடந்தாலும், நான் நானாகவே தான் இருப்பேன். எது நடந்தாலும் நான் வயநாடு மக்களுக்காக போராடுவேன்.
முன்னதாக, மோடி பெயர் குறித்து அவதூறு பேசியதாக குற்றம்சாட்ட பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து மக்களவை செயலகம் அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.