நேதாஜி பிறந்தநாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் – பிரதமருக்கு மம்தா கடிதம்!
நேதாஜி பிறந்தநாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் ஜனவரி 23ஆம் தேதி வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி அவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125வது பிறந்த நாள் வருகிற ஜனவரி 23ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வங்காளத்தின் மாபெரும் மகன்களில் ஒருவரான அவர் தேசிய அளவிலான ஹீரோ.
மேலும் இந்திய சுதந்திர இயக்கத்தின் சின்னம், எல்லா தலைமுறையினருக்கும் உத்வேகமாக திகழக்கூடிய அவரின் அயராத தலைமையின் கீழ் இந்திய தேசிய ராணுவத்தின் ஆயிரக்கணக்கான வீரர்கள் தாய் நாட்டிற்காக மிக உன்னதமான தியாகங்களை செய்தனர். அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தாலும், நேதாஜி அவர்களின் பிறந்த நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மம்தா அவர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.