நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் பெயர் மாற்றம்!
டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக பிரதமரின் அருங்காட்சியகம் என மறுபெயரிடப்பட்டது.
டெல்லியின் தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (NMML) தற்போது அதிகாரப்பூர்வமாக பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கத்தின் துணைத் தலைவரான பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், அதன் பழைய பெயரான நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் பெயரை பிரதான் மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என மாற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், 77வது சுதந்திர தினத்தன்று (நேற்று) இந்த பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை, பிரதமர் அருங்காட்சியகம் என பெயர் மாற்ற மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
டெல்லியில் உள்ள இந்த அருங்காட்சியகம் 1964-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் மறைவுக்கு பிறகு நிறுவப்பட்டது. இதனை, அப்போதைய இந்திய ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். 1948 மே 27 முதல் 1964 வரை முன்னாள் பிரதமர் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.