“NEET” ஏழை மாணவர்களுக்குப் பலம் தருவதாக இருக்கிறது – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
நீட் தேர்வு அவசியம் தேவை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் கருத்து.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன், ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், நீட் தேர்வு என்பது அவசியம் தேவை.
மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் மகளாக இருந்தாலும் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக ஆக முடியும். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிய பொதுத்தேர்வு உள்ளதை போல் திறமையான மருத்துவர்களை கண்டறிவதற்காக நீட் என குறிப்பிட்டார்.
மேலும், நன்றாக படித்தால் யார் வீட்டு பிள்ளை வேண்டுமானாலும் எந்த கிராமத்து பிள்ளை வேண்டுமானாலும் கண்டிப்பாக மருத்துவர் ஆகலாம் என்பது தான் நீட். நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு பலம் தருவதாக இருக்கிறது. நீட் தேர்வில் வரும் பாடங்கள் அனைத்தும் நாம் படிக்கும் பாடங்களில் இருந்து மட்டும் தான் வருகிறது என்றும் வெளி பாடங்களில் இருந்து வரவில்லை எனவும் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வின் தாக்கம் தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு, தமிழக அரசிடம் 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.