விஸ்வரூபமெடுக்கும் நீட் விவகாரம்.! ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்.!
டெல்லி: இந்த வார தொடக்கத்தில் 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்பிக்களின் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் ஆகியவை முடிந்து நேற்று குடியரசு தலைவர் உரை நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து இன்று குடியரசு தலைவர் உரைக்கு பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற இருந்தது.
இதனை தொடர்ந்து, இன்று காலை நாடாளுமன்றம் துவங்கும் முன்னரே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உரைக்கு பதில் அளிக்கும் நிகழ்வை ஒத்திவைத்து விட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கோரியிருந்தார். எதிர்க்கட்சி தலைவரின் இந்த கோரிக்கை மக்களவையில் ஏற்கப்படவில்லை.
அதே போல மாநிலங்களவையிலும் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியை அடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் பகல் 12 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது.