நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவரம்! கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் கண்டுபிடிப்பு!
கடைசியாக நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா எனும் மாணவர். இதன் பேரில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையும் மருத்துவருமான வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடியினர் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் மருத்துவர் வெங்கடேசனை சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
மருத்துவர் வெங்கடேசன் என்பவர் கேரளாவைச் சேர்ந்த ரஷீத் என்ற இடைத்தரகர் மூலம் இருபது லட்ச ரூபாய் கொடுத்து தன் மகனுக்கு பதிலாக வேறு ஆளை வைத்து நீட் தேர்வு எழுதி வைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த ரஷீத் என்பவர் நன்கு படிக்கும் மாணவர்களை கொண்டு அவர்களுக்கு பணம் கொடுத்து நீட் தேர்வு எழுத வைத்து வந்துள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ளது.
சென்ற ஆண்டே இம்ரான் எனும் மாணவனுக்கு பதிலாக வேறு ஒரு ஆளை வைத்து நீட் தேர்வு எழுதி தற்போது அந்த மாணவன் முதலாம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டார். இம்ரான் ஏற்கனவே மொரீசியசிஸில் மருத்துவம் படித்து,அதை பாதியில் விட்டு இங்கு வந்தவர். தற்போது விஷயம் தெரிந்ததும் மொரீஷியசிற்கு தப்பிவிட்டதாக தெரிகிறது.
மருத்துவர் வெங்கடேஷின் நண்பரான சரவணன் மூலமாகத்தான், ரஷீத் எனும் இடைத்தரகர் பற்றிய விவரம் வெங்கடேஷிற்கு தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவர் சரவணன் தனது மகனான பிரவீனையும் இதேபோல ஆள்மாறாட்டம் செய்து மருத்துவம் படிக்க சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதனால் அவர்கள் இருவரையும் சிபிசிஐடியினர் விசாரிக்க உள்ளனர்.
மேலும், ராகுல், அபிராமி என்பவரும் நீட் தேர்வில் குளறுபடி செய்து மருத்துவம் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இதுபோக கடந்த வருடம் நீட் தேர்வில் குளறுபடி செய்து தற்போது மொரிசியஸ் தப்பி சென்றதாக கூறப்படும் இம்ரான் எனும் மாணவனின் தம்பியும் இப்படித்தான் மருத்துவம் சேர்ந்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.