நீட் தேர்வு ஒத்திவைப்பா…? மத்திய அரசு ஆலோசனை…!
நீட் தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த ஓராண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால், நீட் தேர்வு, ஜே.ஈ.ஈ. தேர்வு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால், நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பவில்லை. இதனையடுத்து நீட் தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.