மேகதாது குறுக்கே அணை கட்ட அனுமதி வேண்டும் ! மத்திய அரசுக்கு கர்நாடக அரசு வேண்டுகோள்!
கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய சுற்றுசூழல் துறைக்கு கர்நாடக மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும் கர்நாடக அரசானது அணை கட்ட தீவிரமாக முயன்று வருகிறது.
கடந்த 20ம் தேதி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு எழுதியுள்ள கடிதத்தில் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் நீரை சேமித்து அதில் இருந்து 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அதனால் பெங்களூர் மாநகரின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேகதாது அணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மொத்த மதிப்பு 9000 கோடியாகும் . இதற்காக மாநில அரசானது 5252.400 ஹெக்டேர் நிலம் காயகப்படுத்துகிறது. இதில் 4996 ஹெக்டேர் நிலம் அணையில் நீர் தேக்கவும், 256.40 ஹெக்டேர் நிலமானது பிற கட்டுமான வேலைகளுக்கும் பயன்படுத்த கர்நாடக மாநில அரசானது திட்டமிடப்பட்டுள்ளது.