சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

வக்ஃபு மசோதா குறித்த விவாதம் ராஜ்ய சபையில் மிக நீண்ட விவாதமாக பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

Waqf Bill Discussion Breaks Record

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி நேர 2 நிமிட விவாதத்துடன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதா குறித்து நடைபெற்ற விவாதம், இதுவரை அவையில் நடந்த விவாதங்களிலேயே மிக நீண்ட நேரம் நீடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இது 1981ஆம் ஆண்டு எஸ்மா விவாதத்தின் போது, நடந்த 16 மணி நேரம் 55 நிமிடங்கள் நீடித்த முந்தைய சாதனை நேர விவாதத்தை, 2025 வக்ஃப் வாரிய திருத்த மசோதா மீதான விவாதம் (17 மணி நேர 2 நிமிடம்) முறியடித்தது. இதன் மூலம் வக்ஃப் மசோதா விவாதம் மாநிலங்களவையில் மிக நீண்ட விவாதத்திற்கான சாதனையை படைத்துள்ளது.

ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற இந்த விவாதம் காலை 11:00 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 4:02 மணிக்கு முடிவடைந்தது. இது இந்திய பாராளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பது, பதிவு செய்வது மற்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தனர். மசோதாவின் நோக்கம், அதன் சட்டரீதியான தாக்கங்கள், மற்றும் சமூகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெற்றன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம்பேசுகையில்,” நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இது ஒரு புதிய சாதனை என்றும், இடையூறு இல்லாமல் வியத்தகு விவாதத்திற்கு இது ஒரு சான்றாகும்” என்று கூறினார்.

முன்னதாக, மக்களவையிலும் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, இந்த மசோதாவை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இது சட்டமாகியுள்ளது. அதன்படி, வக்ஃபு சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்