ஊக்கமருந்துத் தடுப்பு உலக நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி
1 மில்லியன் அமெரிக்க டாலர் ஊக்கமருந்துத் தடுப்பு உலக நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு நிதியுதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
சர்வதேச விளையாட்டுபோட்டிகளில் வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறியும் பணியில் ஊக்கமருந்துத் தடுப்பு உலக நிறுவனம் ( World Anti-Doping Agency) ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் புதுமையான பரிசோதனை முறைகளைக் கண்டறிய ஆய்வுப் பணியில் ஈடுபடவுள்ளது.இதற்காக பல நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. உலகளவில் நேர்மையான விளையாட்டுச் சூழலை ஏற்படுத்த, இந்த ஆராய்ச்சிக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அளிப்பதாக இந்தியா உறுதி அளித்துள்ளது. உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் புலனாய்வு மற்றும் உளவுத்துறைக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்தியா அளித்துள்ள நிதி சீனா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகள் அளித்த நிதியைவிடவும் அதிகம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு நாடுகளின் மொத்தப் பங்களிப்பு மற்றும் அதற்கு இணையாக சர்வதேச ஒலிம்பிக்குழுவின் அளிக்கும் நிதியுடன் சேர்த்து மொத்தம் 10 மில்லியன் டாலர் தொகுப்பு நிதி உருவாக்கப்படவுள்ளது. இந்தியாவின் இந்தப் பங்களிப்பு குறித்து ஊக்கமருந்துத் தடுப்பு உலக நிறுவனத் தலைவர் விடோல்ட் பங்காவுக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ எழுதிய கடிதத்தில், ‘‘ஊக்கமருந்து தடுப்பு உலக நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியளிக்க இந்தியா உறுதியளிப்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது 10 மில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைய ஊக்குவிப்பாக இருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.