தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது ! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
நாடாளுமன்ற மக்களவையில் தேசிய மருத்துவ ஆணையம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மருத்துவ கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவை கடந்த வாரம் அவையில் கொண்டு வந்தது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்தார். அதன் படி, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்படும். இந்த ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மசோதா மூலம் மருத்துவம் முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்னும் மருத்துவ தகுதி தேர்வு நடக்கும் என்றும் தெரிகிறது. இந்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.