தேசிய ஆயுர்வேத தினம்2020 : இன்று ஜாம்நகர், ஜெய்ப்பூரில் 2 ஆயுர்வேத மையங்களை திறந்து வைக்கிறார் மோடி.!
தேசிய ஆயுர்வேத தினம் இன்று ஜாம்நகர் மற்றும் ஜெய்ப்பூரில் இரண்டு ஆயுர்வேத மையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் .
இந்தியாவில் ஆண்டு தோறும் நவம்பர் 13-ஆம் தேதி தேசிய ஆயுர்வேத நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தன்வந்திரி பிறந்த தினமான நவம்பர் 13-ஆம் தேதி ஆயுர்வேத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா சூழலில் ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசாங்கம் ஆயுர்வேத கல்வியின் தரத்தை உயர்த்தவும் ,நவீனமயமாக்கவும் பல முயற்சிகளை கடந்த 3-4 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது . அதன்படி இந்தாண்டு கடைப்பிடிக்கப்படும் ஐந்தாவது தேசிய ஆயுர்வேத தினமான இன்று குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமான ஐடிஆர்ஏ மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத மையமான(என்ஐஏ) ஆகிய இரு ஆயுர்வேத மையங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கவுள்ளார் .
இந்த மையங்கள் 21-ஆம் நூற்றாண்டில் ஆயுர்வேத வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் உலகளவில் முக்கிய பங்கினை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.