நாகலாந்து துப்பாக்கி சூடு : ராணுவத்தினர் மன்னிப்பு – உள்துறை அமைச்சர் அமித்ஷா!
நாகலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ராணுவத்தினர் மன்னிப்பு கோரியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
நாகலாந்து மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் தீவிரவாதிகள் என நினைத்து பொது மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் மற்றும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் மன்னிப்பு கோரியதாகவும், தவறான கணிப்பால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதுபோல மக்களும் தவறாக புரிந்துகொண்டு பாதுகாப்பு படையினரின் வாகனங்களில் தீ வைத்தனர். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாகலாந்தில் தற்பொழுது பதற்றம் நிலவினாலும், சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ உயர்மட்ட விசாரணை நடத்தப்படுகிறது. இது போன்ற சம்பவம் இனி நடைபெறாமல் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகலாந்தில் இயல்பு நிலையை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.